ஜீவனாம்சம்
Narinder Pal Kaur Vs M.S. Chawla (2008)
2008ல் டெல்லி உயர்நீதிமன்றம் மேற்கூறிய வழக்கில் மனைவியல்லாத ஒரு பெண்ணிற்கு ஜீவனாம்ச உரிமை கொடுத்து தீர்ப்பளித்தது. காலங்காலமாக ஒரு ஆண் பல மனைவிகள் வைத்துக் கொண்டது நம் இதிகாசங்களில், புராணங்களில் பார்த்து வந்த ஒன்று. இந்தியாவில் திருமணச் சட்டங்கள் இயற்றப்பட்டவுடன் ஒரு தாரம் முறை வலியுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் சட்டம் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் திருமண உறவில் அல்லாத ஒரு பெண் ஜீவனாம்சம் கோர சட்டம் அனுமதிக்கவில்லை. எனினும் மேற் கூறிய வழக்கில் ஒரு ஆண் தான் ஏற்கனவே மணமாகியிருந்ததை மறைத்து 14 ஆண்டுகள் ஒரு பெண்ணுடன் மனைவி என அந்தஸ்தை கொடுத்து இரண்டு குழந்தைகளயும் பெற்று சமூகத்தில் அந்த குடும்பத்தின் தலைவன் என வெளிக்காட்டிக்கொண்டு இருந்த காரணத்தால் இந்த வழக்கின் தீர்ப்பில் இந்த இரண்டாவது மனைவியையும் சட்டப்பூர்வமாக ஜீவனாம்சம் பெறுவதற்கு அங்கீகரிக்கலாம் என்று கூறி நீதிமன்றம் ஜீவனாம்சமும் வழங்கியது.
Komalam Amma Vs Kumara Pillai Raghavan Pillai and others (2008)
உச்சநீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பில் ஒரு பெண்ணிற்கு வசிக்கும் இருப்பிடம் ஏற்படுத்திக் கொடுப்பதும் ஜீவனாம்சத்தின் ஒரு அங்கமே என்று கூறியுள்ளது. மேலும், அந்த இருப்பிடமும் அந்தப் பெண் பழக்கப்பட்ட அந்தஸ்திலேயே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
Maintenance and Welfare of Parents and Senior Citizens Act 2007 (பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் 2007)
இந்திய நாடு கூட்டுக் குடும்பமுறைக்கு பெயர் போனது. ஆனால், காலத்தின் கட்டாயத்தால் பொருளீட்டுவதற்காக இளைய தலைமுறையினர் வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்த காரணத்தால் நம் நாட்டில் வயதான பெற்றோர்களும் மூத்த குடிமக்களும் பராமரிக்க ஆளில்லாமல், அன்பு காட்ட ஆளில்லாமல் தனிமை படுத்தப்பட்டிருப்பது நிதர்சனமான உண்மை. இதனாலேயே இன்று புற்றீசல் போல் முதியோர் காப்பகங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 125ன் கீழ் பெற்றோர்கள் ஜீவனாம்சம் பெற வழிவகை செய்யப்பட்டிருந்தாலும் 2007ம் ஆண்டு கூடுதலான இச்சிறப்பு சட்டத்தினையும் இயற்றியுள்ளது.
இந்தச் சட்டத்தின் பிரிவு 5ன் கீழ் தன்னை பராமரித்துக்கொள்ள இயலாதஒரு மூத்த குடிமகன், ஆதரவற்று விடப்பட்ட பெற்றோர் தன்னிச்சையாகவோஅல்லது ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலமாக இதற்கென நியமிக்கப்பட்ட ஆணையத்தின் முன் வழக்கு தாக்கல் செய்யலாம். மேலும், யாருமே பராமரிக்க இயலாத நிலையில் இருக்கும் முதியோர்களை அரசே முதியோர் இல்லங்களின் வாயிலாக பராமரிக்க சட்டம் வலியுறுத்துகிறது. மேலும், இந்த சட்டத்தின்கீழ் மனு தாக்கல் செய்பவரின் குழந்தைகள் அல்லது வாரிசுகளுக்கு சம்மன் அனுப்பி ஆணையம் ஆலோசனை வழங்கி சமரசமுயற்சி மேற்கொள்கிறது. சமரச முயற்சி தோல்வியடையும் பட்சத்தில் ஆணையம் ஜீவனாம்சம் வழங்கக் கோரி தீர்ப்பினை வழங்குகிறது.
இந்திய நாட்டில் நீதிமன்றங்களால் ஜீவனாம்ச வழக்கு தங்களுக்குசாதகமாக தீர்ப்பு பெற்றும் கிட்டதட்ட 46 % பெண்கள் அதனை கையில் பெற முடியாமல் இருக்கி றார்கள். மேலும், 60% பெண்கள் நீதிமன்றத்தின் மூலம் உரிய நேரத்தில் ஜீவனாம்சம் பெற முடியாமல் தவிக்கிறார்கள். திருமணத்தின் போது சீதனமாக கொடுக்கப்படும் பொருட்களும் அல்லது கணவரோ அல்லது அவரது குடும்பத்தாரோ வரதட்சணையாக கேட்டு வாங்கும் பொருட்களையோ திரும்பப் பெறுவது என்பது ஒரு சவாலான விஷயமாகவே இருக்கிறது. 30% பெண்கள் மட்டுமே தங்கள் நகைகளையோ, உடமைகளையோ ஓரளவிற்கு தங்கள் வசமாக்கிக் கொள்ள முடிகிறது. மேலும், கணவரிடமிருந்து பிரிந்து வாழும் 75% பெண்களுக்கு சுய சம்பாத்தியமோ, போதிய வருமானமோ இல்லா நிலையில் நீதிமன்றம் கொடுக்கக் கூடிய ஜீவனாம்சத்தையும் சரிவர பெற முடியாத நிலையிலும் அல்லல் பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
காலங்காலமாக நம்முடைய நாட்டில் ஒரு தனி நபர் தர்மப்படி தான் பராமரிக்க வேண்டியவர்களை பராமரிக்கத் தவறுவது ஒரு மனிதாபிமான மற்ற குற்ற செயல் என்றே வேத உபநிடதங்கள் கூறுகின்றன. மேலும், அனைத்து மதங்களும் இதனையே பறைசாற்றுகிறன. இன்றைய தலை முறை இதனை தவறியதால் தான் சட்டத்தின் மூலம் அதனை நிறைவேற்றவேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. எந்த ஒரு தனி நபரும் தர்மப்படிதான் பராமரிக்க வேண்டிய நபரை பராமரிக்கத் தவறும் பட்சத்தில் சட்டம் தன் கடமையை
செய்யும்.
No comments:
Post a Comment